Latest News

ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு _ நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி.

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன

காத்மண்டு,

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை தாக்கி வரும் சூழலில், சமீப காலங்களாக பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.  இவற்றில் இந்தியாவில் 9 மாநிலங்களில் இந்த பாதிப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், நேபாளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதுபற்றி அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடை வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தலைநகர் காத்மண்டுவில் தர்கேஷ்வர் நகராட்சி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக, 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன.  542 முட்டைகள் மற்றும் 75 கிலோ கோழி தீவனம் ஆகியவையும் அழிக்கப்பட்டன.  பறவை பண்ணையில் நடந்த பி.சி.ஆர். பரிசோதனை அடிப்படையில் தொற்று உறுதியானது என தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, பண்ணை பறவைகளிடையே சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் முரணாக தென்பட்டால் அதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பண்ணை முதலாளிகள் மற்றும் விவசாயிகளை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.