தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் தீடிரென ஒரு நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தமிழக சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் காவல்துறையினரின் தடுப்பு அருகே தீடிரென ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.

அப்போது அதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி, பத்திரமாக மீட்டு காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

ஊடகத்துறையின் அடையாள அட்டையை காட்டி கலைவாணர் அரங்க வளாகத்திற்குள் அவர் நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட அவர் தன்னுடைய பெயர் ஆறுமுகம் என்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

காவல்துறையினர் உயர் பாதுகாப்பில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்குள் சட்டமன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது, வெளியே ஒருவர் தீக்குளிக்க முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About The Author